அனுஷ்கா சர்மாவுடன் திருமண நிச்சயதார்த்தமா?: விராட் கோலி மறுப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி, காதலியுடன் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, கோலி- அனுஷ்கா சர்மா திருமண நிச்சயதார்த்தம் உத்தரகாண்ட் மாநிலம் நரேந்தர் நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் புத்தாண்டு தினம் (ஜனவரி1) அன்று நடைபெற இருப்பதாகவும், அதற்காகத் தான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் அங்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த தகவல்கள் தவறானவை, வெறும் வதந்தி என்று விராட் கோலி மறுத்துள்ளார். ‘புத்தாண்டு அன்று எங்களுக்குள் நிச்சயதார்த்தம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி நடந்தால் அதை நாங்கள் மறைக்க மாட்டோம்’ என்று கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.