அரச நிறுவனமான பரந்தன் இரசாயன நிறுவனத்திற்குரிய சுமார் 45 லட்சம் ரூபா பணத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செலவிட்டுள்ளமை பற்றிய எழுத்து மூலமான சாட்சிகள் விசாரணைகளில் கிடைத்துள்ளன.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் திட்டங்களை முன்னெடுப்பதாக பொய்யான தகவல்களை முன்வைத்து அரசியல் நடவடிக்கைகளுக்காக இரசாயன நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 2014 ஆம் செப்டம்பர் மாதம் வரை, கிழக்கு, வடமேல், ஊவா, சபரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மிகப் பெரிய ஊழல்,மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் இது சம்பந்தமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பணம் தனிப்பட்ட செலவுகள் மற்றும் தேர்தல்கள் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஊழலுக்கு எதிரான அமைப்புகள் முறைப்பாடுகளை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.