கல் வீடுகளை அமைப்பதற்கு முன்வாருங்கள்..!

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வீடுகளை – கல் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கு மாகாண மக்கள் ஏற்க மறுத்த பொருத்து வீட்டை முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டைத் திணிப்பதற்கு முயலும் காரணத்தைச் சொல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு.

எங்கள் மக்களுக்கு வீடு வேண்டும். அதனை நாம் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். கல் வீடாகவே இருக்கவேண்டும். தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்கமாட்டோம்.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். நாம் நீண்ட ஆய்வுகள் ஆராய்வுகளின் பின்னர்தான் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீடு வேண்டாம் என்று சொன்னோம்.

இதனை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த வீட்டுத் திட்டத்தைத் திணிப்பதால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினைகள் ஏற்படும்.

எல்லோருக்கும் எதிர்க்கும், பிரச்சினைக்குரிய திட்டத்தை முன்னெடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் திணிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டிருந்தார்.

எமது பிரதேச காலநிலை நிலைக்குப் பொருந்தாது இருக்கும் இந்தத் திட்டமானது மலையக கால நிலைக்குப் பொருந்தக் கூடும். அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையகத் தலைவர்களுடன் பேச வேண்டும்.

அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு நாசகாரத் திட்டத்தை எம் மீது அரசு திணிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எமது மக்களின் வீட்டுத் தேவையைப் பொருத்து வீடு நிறைவு செய்யாது. உசிதமான மாற்றுத் திட்டத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.