அனுமனுக்கு சாத்தப்படும் மாலைகள்!

* சீதையைத் தேடி இலங்கை வந்தார் அனுமன். அந்த நேரத்தில்தான், சீதை தன் உயிரை மாய்க்கும் முடிவுக்கு வந்திருந்தார். திடீரென்று ‘ராம நாமம்’ கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றார். ராவணனின் கோட்டைக்கும் ராம நாமம் கேட்டதும் அவர் மனம் மகிழ்ந்து போனது. தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

அசோக வனத்தில் மரத்தில் இருந்து கீழே குதித்த அனுமன், ‘நான் ராமனின் தூதுவன்’ என்று கூறி, ராமபிரான் கொடுத்த மோதிரத்தை சீதையிடம் தந்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து, அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

* போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.

* திருமாலுக்கு உகந்த இலை துளசி. திருமாலின் அவதாரம்தான் ராமபிரான். எனவேதான் அனுமனுக்கும் துளசி மாலை சாத்தப்படுகிறது. தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை, தனக்கு செலுத்தும் மரியாதையைப் போன்றது என்று எண்ணுபவர் ராமபிரான்.

* வானரங்களுக்கு மிகவும் பிடித்தது வாழைப்பழம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்கிறார்கள்.