4 ஆயிரம் ரன்களை கடந்தார் கனே வில்லியம்சன்!

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதமின் சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் 26 வயதான கனே வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் 31 ரன்களில் (36 பந்து, 5 பவுண்டரி), வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் ஆனார். முன்னதாக வில்லியம்சன் பவுண்டரி அடித்து 23 ரன்களை தொட்ட போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இதுவரை 102 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள வில்லியம்சன் அதில் 96 இன்னிங்சில் களம் இறங்கி 4,011 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு மார்ட்டின் கப்தில் 112 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே நியூசிலாந்து வீரரின் சாதனையாக இருந்தது.

ஒட்டுமொத்த அளவில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை தாண்டியவர்களின் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜூடன் வில்லியம்சன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இந்த சாதனை பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா (81 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (88), இந்தியாவின் விராட் கோலி (93) ஆகியோர் உள்ளனர்.