டிரம்ப் அறக்கட்டளையை கலைக்கப் போவதாக அமெரிக்காவின் வருங்கால அதிபர் அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.

பெரும் கோடீஸ்வரரான இவர் ‘டொனால்ட் ஜே. டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

உள்நாட்டு வருவாய் சட்டத்தை மீறிய வகையிலும், வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்திலும் சில முறைகேடுகளில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டதாக ‘கெய்டு ஸ்டார்’ என்ற இணையதளம் ஆதாரத்துடன் தகவல்களை வெளியிட்டது.

புளோரிடா மாநில அட்டார்னி ஜெனரல் பாம் பான்ட்டி என்பவருடன் தொடர்புடைய ஒரு குழுவுக்கு இந்த அறக்கட்டளை நன்கொடைகள் தந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தப் புகார்கள் தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரலின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையை கலைத்து விடப்போவதாக அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நாட்டின் அதிபராக பதவி ஏற்கும்போது, இது தொடர்பாக எந்தவொரு கருத்து மோதலும் ஏற்பட்டுவிடக்கூடாது என கருதி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளையை கலைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது வக்கீலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.