எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டம் தொடங்கும் முன்னர் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு அறிவிக்கப்பட வேண்டும் என பலமிக்க நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதனை வலியுறுத்தியுள்ளன.
புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அடுத்தக்கட்டமாக சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தினால், மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த மேலும் ஒரு வருட காலஅவகாசத்தை வழங்க மேற்படி நாடுகள் எதிர்பார்த்துள்ளன.
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டம், போர் காலத்தில் நடத்த விடயங்களை விசாரிக்க உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்தல், போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தவற்றை விசாரிக்க நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்துதல் உட்பட பல நிபந்தனைகளை மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இவற்றை செயற்படுத்த எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்ககளில் இருந்து விடுதலையாக முடியும் என எண்ணுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.