இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மொகமது ஷமிக்கு இடமில்லை?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 என அபார வெற்றிப் பெற்றது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி விளையாடினார். மொகாலி டெஸ்டின்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மும்பை மற்றும் சென்னை போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மீண்டும் இந்தியா வந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொகமது ஷமி விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

அவரது முழங்கால் காயத்தால் வலியில் அவதிப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது தனது காயம் குணமடைந்து உடற்தகுதி பெறுவதற்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். ஷமி இடம்பெறாவிடில் இசாந்த் சர்மா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இல்லாவிடில் ஆசிஷ் நெஹ்ரா இடம்பெறலாம் எனக்கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா, தவான், ரகானே ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.