ஈராக் நாட்டில் எதிர்க்கட்சி அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு : 7 பேர் பலி

ஈராக்கில் தன்னாட்சி பெற்றுள்ள குர்திஸ்தான் பகுதியில் கோய்சின்ஜாக் நகரில் ஈரான் நாட்டின் எதிர்க்கட்சியான ‘குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்’ அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த குண்டுவெடிப்புகளால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்புகளில் ‘குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்’ தொண்டர்கள் 5 பேர், பாதுகாப்பு படை வீரர் ஒருவர், ஒரு குழந்தை என 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புகளில் பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈராக்கில் பாதுகாப்பு நிறைந்த தன்னாட்சி பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகரில் இப்படி இரட்டை குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது ஒரு அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.