வடமாகாண சபையில் குழப்பம்! செங்கோலை தூக்க முயற்சி : சபை ஒத்திவைப்பு!

வடமாகாணசபையில் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்ற முயற்சித்த ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகாணசபையில் கடும் குழப்ப நிலை உருவாகி செங்கோலை தூக்கவும் முயற்சித்த நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் முரண்பட்டு செங்கோலை தூக்கவும் முயற்சித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான விவாதம் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரும்போது என்ன நிலைப்பாட்டில் கொண்டு வரப்பட்டார். இப்போது முதலமைச்சர் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி நடந்து கொண்டிருக்கின்றார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், முதலமைச்சரை சூழ உள்ளவர்கள் முதலமைச்சரை தவறாக வழி நடத்துகின்றார்கள். என மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சயந்தனும் எழுந்து,

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்ட முதலமைச்சர் வெளியே விகாரைகள் கட்டப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் துணைபோகிறார்கள். எனவும் வெளிநாடுகளுக்கு சென்று மாகாணசபையில் உறுப்பினர்கள் சிலர் குழப்பம் விளைவிக்கின்றார்கள். எனவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன் போன்றவர்கள் முதலமைச்சரை விமர்சிப்பதாக இவர்களுடைய பேச்சுக்கள் இருக்கின்றன. மலும் இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதானால் வேறு இடத்தில் விவாதிக்கலாம் எனக் கூறியதுடன் சபையை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார்.

இந்த நிலையில் சபையை எப்போது ஒத்திவைப்பது, எப்போது கூட்டுவது என எனக்கு தெரியும். இந்த சபையை கலைக்க ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என அவைத் தலைவர் கூறியதுடன் ‘நீ’ கீழே இரு எனவும் கூறினார்.

இந்த நிலையில் அவைத் தலைவரை நோக்கி “பேசும் வார்த்தைகளை சிந்தித்து பயன்படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்ட நிலையில் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்குவதற்காக அவைத் தலைவரை நோக்கி சென்றார். எனினும் மற்றய உறுப்பினர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினார்கள்.

மேலும் சில உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டனர். இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கும் போதே அவைத் தலைவர் ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளை மீளவும் பயன்படுத்தினார். இந்நிலையில் குழப்பம் நீடித்ததை தொடர்ந்து சபை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.