நவக்கிரக தோஷம் போக்கும் புஜவீர ஆஞ்சநேயர்!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் ஜெயவீர அனுமன் சிவபெருமானின் அவதாரமாக தோன்றியவர். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.

நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இங்கு எழுந்தருளி இருக்கும் அனுமன் நவக்கிரக தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக் கோவிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை தரிசிப்பதால் அறிவு கூர்மையாகும். உடல் வலிமைபெறும். அச்சம் அகலும். வியாதி விலகும். வாக்கு வன்மை வளமாகும்.

உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையிலும், வியாழக்கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்யவாசஸ்தலம் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட காலநேரம் பார்க்க வேண்டியது இல்லை. எப்போதும் வழிபடலாம்.