கொலையாளிகளை காப்பாற்றும் மஹிந்த..!

ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்து வரும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் புதியதோர் திருப்பு முனையாகவே லசந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது.

இந்த உரையாடலை ஆராயும் போது ஏகப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்றே கூறப்படுகின்றது.

முக்கியமாக லசந்த கொலைக்கும் மஹிந்த தரப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலேயே இந்த உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது என்றே கூறப்படுகின்றது.

காரணம் இத்தனை வருடங்கள் கழித்து இந்த உரையாடல் வெளிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியப்பாடு குறைவே.

அதேசயமம் தற்போது வெளியான தொலைபேசி உரையாடலில் “ உங்களுக்கு உதவி செய்த ஓர் நபர் கொலையாளியாக இருந்தாலும் கூட அவர்களை காப்பாற்றும் ஒருவரே நீங்கள் அது அத்தனை நல்லதல்ல அதனை விட்டு விடுங்கள்” என லசந்த மஹிந்தவிடம் தெரிவித்துள்ளார்.

அதனை ஒத்துக்கொள்வதோடு “நான் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன் ஆனாலும் கேட்க மாட்டார்களேஎனவும் மஹிந்த பதில் அளித்துள்ளார்.

இதுவும் சந்தேகத்திற்கு உரியதே, இதன் மூலம் மஹிந்தவின் முக்கிய கொலைகள் தொடர்பிலான ஆதாரங்கள் லசந்தவிடம் இருந்திருக்கலாம் என்ற ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக இந்த உரையாடலில் பிரதமர் ரணில், மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை சிக்க வைத்து மஹிந்த தரப்பு தப்பிக் கொள்ளும் ஓர் யுத்தியே இந்த உரையாடலின் பின்னணி என கூறப்படுகின்றது.

மேலும் லசந்த கொலை தொடர்பில் 2009ஆம் ஆண்டுகளில் வன்னி கட்டளைத் தளபதியாக பதவி வகித்த ஜகத் ஜயசூரியவிடம் நீண்ட நேரம் விசாரணைகள் நடைபெற்றிருந்தது.

அந்த விசாரணையைத் தொடர்ந்தே இப்படியான ஓர் ஆதாரம் வெளிவந்துள்ளது. இந்த உரையாடலை 2010களிலேயே வெளியிட்டிருக்கலாம் ஆனாலும் அப்போது வெளியிடாமல் வழக்கு சூடு பிடித்துள்ள இப்போது வெளிவந்தது சந்தேகமே.

அதேபோல 17 இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் இந்த கொலையுடன் தொடர்பு பட்டுள்ளனர். குறிப்பாக லசந்தவை கொன்றது நானே என ஓர் இராணுவ வீரர் தற்கொலையும் செய்து கொண்டிருந்தார்.

அவரின் தற்கொலை கடிதத்தில் ஏன் கொன்றேன் என்ற காரணம் இல்லை மாறாக இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் பிரேமானந்த உதலாகமவுக்கு பதிலாக மலிந்த உதலாகம என்ற பெயரை மாற்றி எழுதியிருந்தமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதன் மூலம் அது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று கொண்டு தான் வருகின்றது.

மேலும் 2015ஆம் ஆண்டு குறித்த கொலை வழக்கில் பி.எஸ்.திஸேரா என்ற பொலிஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஓர் வழக்கு பதிவானது.

அதனைத் தொடர்ந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், விசாரணையின் முக்கியத்துவம் கருதி அதன் இரகசியம் பேணப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்போது தெரிவித்தனர் ஆனால் இது வரையில் அதுவம் வெளிப்படுத்தப்பட வில்லை.

மேலும் லசந்த கொலை செய்தது யார் என எனக்கு தெரியும் என ஊடகவியலாளரிடமே பகிரங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் சென்ற வருடம் கூறியிருந்தார் ஆனாலும் இன்று வரை அதனை அவர் தெரிவிக்க வில்லை.

இவை மட்டுமல்லாது லசந்த கொலை தொடர்பில் 63 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது ஆனால் இது வரையில் அது நடைபெற்றதா என்பதும் சந்தேகமே.

லசந்த கொலையில் சிக்கிய அனைவருமே இராணுவத்தினர் அப்போதைய ஆட்சியாளர்கள் உத்தரவிடாமல் இராணுவத்தினருக்கு இதனை செய்ய துணிவு இருக்காது.

தற்போது இராணுவத்தினர் தொடர்பில் அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும் என மஹிந்த தரப்பு வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைக்கும் போது கடந்த ஆட்சியிலும் இதே நிலைப்பாடு தான் இருந்திருக்கும் என்பது முற்றிலும் பொருத்தமே.

இவற்றின் அடிப்படையில் லசந்தவின் கொலைக்கு அப்போதைய அரசு மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போன்றோரே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனவும்.,

அதனை மறைக்கவும் வழக்கை திசை திருப்பி விடுவதற்காகவுமே இப்போது மஹிந்த, லசந்த நெருங்கிய நண்பர்கள் என்ற வகையில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.