பிரபல டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவுக்கு கத்திக்குத்து

விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான செக்குடியரசு டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்தினார்.

செக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா. 26 வயதான அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிசில் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் கிவிடோவா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். செக்குடியரசின் கிழக்கு பகுதியில் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று காலை அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர் கிவிடோவாவின் வீட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தான். அப்போது அங்கு இருந்த கிவிடோவா சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 35 வயது மதிக்கத்தக்க அந்த மர்மஆசாமி மறைத்து வைத்து இருந்த கத்தியால் கிவிடோவாவை குத்தினான். அதனை தடுக்க முயன்ற கிவிடோவுக்கு கையில் கத்திக்குத்துகள் விழுந்தன. பிறகு அவன் தப்பி ஓடி விட்டான்.

இதில் இடது கையில் பலத்த காயம் அடைந்த கிவிடோவா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காயம் உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், இடது கையால் விளையாடும் பழக்கம் கொண்ட கிவிடோவா காயம் குணம் அடைந்து விரைவில் களம் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. கிவிடோவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர் யார்? என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிவிடோவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மர்ம நபரிடம் இருந்து என்னை தற்காத்து கொள்ள எடுத்த முயற்சியில் என்னுடைய இடது கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். நான் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் தான். காயம் கடுமையானது என்பதால் சிறப்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமானதாகும். மனதளவில் நான் வலுவானவள். காயத்தில் இருந்து போராடி மீண்டு களம் திரும்புவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.