ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது: 12 பேர் பலி!

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டி விட்டது. அதற்கு இப்போதே விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் பெர்லினில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே இந்த மார்க்கெட் உள்ளது. அங்கு உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 8 மணி அளவில் அங்கு அதிவேகமாக ஒரு லாரி வந்தது. அது நிற்காமல் மார்க்கெட்டுக்குள் புகுந்து சுமார் 50 முதல் 80 அடி தூரத்துக்கு சரமாரியாக மோதியது.

அதில் லாரியின் சக்கரத்துக்குள் ஏராளமானவர்கள் சிக்கி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே இச்சம்பவம் விபத்து அல்ல. தீவிரவாதிகளின் தாக்குதல் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த லாரியை ஒட்டியவர் ஒரு அகதி. இவர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் இருந்து பிப்ரவரி மாதம் ஜெர்மனி வந்து இருக்கிறார். மேலும் கடந்த ஜூலை 14-ந்தேதி நைஸ் நகரில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கூட்டத்தில் லாரி ஏற்றி 86 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.

அதே போன்று இத்தாக்குதலும் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கூட்டத்திற்குள் லாரியை ஓட்டி பலரை கொன்று குவிக்கும்படி தனது தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.