மறைந்த ஜெயலலிதாவின் அச்சு அசல் போலவே தோற்றத்திலும் பேச்சிலும் அவரது அண்ணன் மகள் தீபா தோற்றமளிப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்துள்ளது.
ஜெ. தீபா.. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிகம் அடிபடுகிற பெயர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள். ஜெயலலிதாவின் ரத்த உறவு.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவரை அனுமதிக்க மறுத்தார்கள்.
ஜெயலலிதா மறைந்தபோதும் பெரும் போராட்டத்துக்கு பின்னர்தான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தீபாவால் முடிந்தது.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிலும் கூட தீபா அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவின் தலைவராக ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக தீபாதான் வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தி டிவியில் தீபாவின் முழுமையான பேட்டி இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்பேட்டியின் தொடக்கம் முதலே தமது குடும்பத்துக்கும் அத்தைக்குமான உறவை ஜெயலலிதாவை சுற்றியிருந்தவர்கள்தான் தடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதேநேரத்தில் தீபாவின் தோற்றம், பேச்சு, உடல்மொழி அத்தனையுமே அச்சு அசலாக ஜெயலலிதாவை போல இருப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்திருக்கிறது. இனி ஜெயலலிதாவின் ஒரே வாரிசு அதிமுகவின் ஒரே தலைவி ஜெ. தீபா என்ற குரல் வலுக்கவே செய்யும்.







