ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் மூலம் 99 சதவீத நேர்மையான மக்களை மோடி வேடிக்கை பொருள் ஆக்கிவிட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கினார்.
சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தின் ஜாவுன்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். அண்மையில், “என்னை பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பூகம்பம் வெடிக்கும். மோடியின் தனிப்பட்ட ஊழலை அப்போது அம்பலப்படுத்துவேன்” என்று ராகுல்காந்தி ஆவேசமாக கூறி இருந்தார். இந்த நிலையில் ஜாவுன்பூர் கூட்டத்தில் பிரதமரை மேலும் கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறியதாவது,
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏழைகளின் பணத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொண்டுவரப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு ரூ.1,200 கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து இருக்கிறது.
அதேபோல் போல் 50 பணக்கார குடும்பங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெற்றும் கொடுத்து இருக்கிறார். ஆனால், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கு மட்டும் தயங்குகிறார். அண்மையில் மோடியை சந்தித்து விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. நமது நாட்டின் பெரும்பான்மையான சொத்து 50 குடும்பங்களிடம் உள்ளது. அந்த சொத்துகளை வைத்துள்ள நண்பர்களுடன்தான் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பிரதமர் பயணம் செய்கிறார். அதுவும் அந்த பெரும் பணக்காரர்களின் விமானங்களில்தான் பறக்கிறார்.
எல்லா பணமுமே கருப்பு பணம் அல்ல. அதேபோல் எல்லா கருப்பு பணமும், ரொக்கமாக இருக்காது. 94 சதவீத கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகள், ரியல் எஸ்டேட், நில ஒப்பந்தங்கள் மீதான முதலீடு மற்றும் தங்கம் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, மீதமுள்ள 6 சதவீத மக்களை மட்டுமே சுற்றி பிரதமர் ஓடுவது ஏன் என்பது தெரியவில்லை.
நாட்டின் 60 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பேரிடம் குவிந்து கிடக்கும் நிலையில் மீதமுள்ள 99 சதவீத நேர்மையான மக்களை ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் மூலம் பிரதமர் வேடிக்கை பொருளாக்கி விட்டார். இந்த நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் கோஷங்களை எழுப்பினர்.
இதைக் கண்டித்த ராகுல்காந்தி, “மோடிக்கு எதிரான நமது போராட்டம் அரசியல் ரீதியானது. எனவே அவருக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பவேண்டாம். இதுபோன்ற கோஷங்களை பாசிசவாதிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும்தான் பயன்படுத்துவார்கள். நமக்கு அது கூடாது” என்று எச்சரித்தார்.







