யாழில் உருளைக்கிழங்கு செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்..!

யாழ்.குடாநாட்டு விவசாயிகள் இம்முறை உருளைக்கிழங்குச் செய்கையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், ஏழாலை, குப்பிளான், ஈவினை, கட்டுவன், தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, ஆவரங்கால், இணுவில், மருதனார்மடம், புத்தூர், நவக்கிரி, அச்செழு, நீர்வேலி,

கோப்பாய், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், அச்சுவேலி போன்ற பகுதிகளில் விவசாயிகள் மும்முரமாக உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.குடாநாட்டில் விவசாயிகள் 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொண்டுவருகின்றனர். சசி, றெட்லசோடா, அனோவா போன்ற மூன்று ரக உருளைக்கிழங்கு விதை இனங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் முதற்கட்டமாக 325 விவசாயிகளுக்குத் தலா 200 கிலோ எடையுள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யயப்பட்ட சசி ரக உருளைக்கிழங்கு விதை இனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்காக மத்திய அரசின் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் ஊடாக 22.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை இனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மிகவும் ஆர்வத்துடன் விவசாயிகள் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.