ஜப்பானில் பறவைக்காய்ச்சல் பரவுகிறது : 2 லட்சம் பறவைகள் அழிப்பு!

ஜப்பான் நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அந்த நாட்டின் நீகிட்டா நகரத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கி 5½ லட்சம் கோழிகள், 23 ஆயிரம் வாத்துகள் கொன்று புதைக்கப்பட்டன.

இப்போது அங்கு ஹொக்கைடோ தீவுப்பகுதியில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளையும், வளர்ப்பு பறவைகளையும் கொன்று புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவற்றை கொன்று புதைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “கோழிகளை தொடர்ந்து கொன்று வருகிறோம். ஆனால் இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாக இருப்பதால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் உறைபனியும் இந்தப் பணியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

ஜப்பானில் இந்த குளிர் காலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கி பறவைகளை கொன்று குவிப்பது இது 5-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.