199-ல் கொடுமையான ஷாட் மூலம் அவுட்டானேன்: லோகேஷ் ராகுல் கூறுகிறார்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் சேர்த்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 60 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 331 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் ரன்குவிப்புக்கு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 311 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 199 ரன்கள் குவித்து ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

இரட்டை சதத்தை தவற விட்டது குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நான் கடந்த இரண்டு மாதங்களாக ஏராளமான போட்டிகளில் விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம். மும்பை வான்கடே போட்டியில் நிண்ட நேரம் செலவழித்தது சிறந்ததாக இருந்தது.

நான் சென்னை வரும்போது அடுகளம் மிகவும் சிறந்ததாக இருந்தது. அதை நான் வீணடிக்க விரும்பவில்லை. நியூசிலாந்து தொடரை முழுவதுமாக நான் இழக்க நேரிட்டது. நான் நல்ல பார்மில் இருப்பதாக நினைத்தேன். வீட்டிற்குச் சென்று என்னுடைய உடற்தகுதிக்காக கடின பயிற்சி எடுத்தேன். ஒரு ரஞ்சி போட்டியில் விளையாடினேன். அது எனக்கு ஏறுமுகமாக அமைந்தது.

மும்பை ஆடுகளம் நன்றாக இருந்த நிலையில், ரன் குவிக்காமல் என்னையே நான் கொன்றுவிட்டேன். தற்போது சென்னையில் இன்று அடித்த சதம் சிறந்த சதத்தில் ஒன்றாக இருக்கப்போகிறது.

பயிற்சியாளர் ஒவ்வொரு ரன்களும் முக்கியமானது என்று கூறுவதை தற்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் இந்த எண்ணத்தோடு இனி விளையாடுவேன். மிகவும் கொடுமையான ஷாட் அடித்து 199-ல் அவுட்டாகிவிட்டேன்.

வீடியோவில் இன்னும் அந்த ஷாட்டை நான் பார்க்கவில்லை. நான் மழை தூரலுக்குக்கு கீழ் நின்று கொண்டிருக்கிறேன். முழுவதுமாக மூழ்க கொஞ்சம் நேரம் எடுக்கும். எளிதாக இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்தேன். அடுத்த போட்டிகளில் வலுவான நிலையுடன் திரும்பி வருவேன்’’ என்றார்.