இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி முழு நாடும் அழிந்து போவது நிச்சயம்..!!!

நாடு இப்போது பயணிக்கும் பாதை நிச்சயமாக இளைஞர்களை ஆயுதம் ஏந்துகின்ற கட்டாய நிலைக்கு தள்ளிவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்துகளை தெரிவிக்கும் போது,

அண்மையில் அம்பாந்தோட்டையில் இடம் பெற்ற விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இது வரைக்கும் எதனையும் கூறவில்லை.

ஆனாலும் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.

இதன்படி ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய அதிகாரங்களை வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதா அல்லது பலவந்தமாக வேறு ஒருவர் கைகளுக்கு சென்று விட்டது என்ற சந்தேகம் எழுகின்றது.

இப்போதைய நிலவரப்படி நாட்டின் முப்படைகiள இயக்கும் அதிகாரங்களை பிரதமரே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.

அதேபோன்று அமைச்சர் சரத் பொன்சேகா அப்பாந்தோட்டை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் இறைச்சிக்காக பின்னால் செல்லும் விலங்கு போல செயற்படும் ஒருவராகவே காணப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிட்டு கூற வேண்டிய ஒன்றாகும்.

மேலும் இந்த நாட்டினை சர்வதேசத்திற்கு கூறு போட்டு விற்று அவற்றின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலை தொடர்ந்து கொண்டு செல்லுமானால் எதிர்காலத்தில் நாட்டிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இந்த நாட்டின் இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

இதேவேளை புதிய அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியை மையமாகக் கொண்டு குறிப்பாக பௌத்தத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முன்வைக்கப்படுமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனாலும் நாட்டை பிளவு படுத்தி கலாச்சாரத்திற்கும் பௌத்தத்திற்கும் அழிவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த அரசியல் யாப்பு உள்ளது இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இந்த புதிய அரசியல் யாப்பு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகையில் நிறைவேற்றப்பட்டு விட்டால் நாடு பிளவுபட்டு இப்போது இருக்கும் சமாதானம் இல்லாமல் போய் முழு நாடுமே அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுவிடும்.

அப்படி அரசியல் யாப்பு அமைக்கப்பட்டு விட்டால் 20 வருடங்கள் அல்ல எத்தனை வருடங்கள் ஆனாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்பதனையும் பொதுமக்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.

மாறாக அதற்கு நாம் இடம் கொடுத்து விட்டால் எதிர்கால சந்ததிகள் எமது கல்லறையின் மீது உமிழ்ந்து நீங்கள் தான் இவற்றிற்கு காரணம் என்று கூறிவிடும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அதனால் நாளை நாட்டிற்கு ஏற்படப்போவது என்ன என்பது தொடர்பில் தெரிந்து கொண்டு இணைந்து செயற்பட்டு புதிய அரசியல் யாப்பை எதிர்க்க வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.