செக் மோசடி… பவர் ஸ்டாருக்கு நீதிமன்றம் பிடியாணை!

செக் மோசடி வழக்கில் பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சேலம் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் அக்கு பஞ்சர் வைத்தியராக தொழிலை ஆரம்பித்து பின்னர் லத்திகா படம் மூலம் இயக்குநர் – நடிகர் என அவதாரமெடுத்தவர் சீனிவாசன்.

ஐ, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்பட ஏராளமான படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

இடையில் கடன் வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார் சீனிவாசன். திகார் சிறையில் சில காலம் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது நண்பரான சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் அர்த்தநாரியிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தான் பெற்ற கடனுக்காக, நடிகர் சீனிவாசன் தலா ரூ.1 லட்சம் என 5 செக்குகளை அர்த்தநாரியிடம் வழங்கியுள்ளார்.

அந்த செக்குகள் வங்கிகள் பணம் இருப்பு இல்லை என செக் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசனிடமிருந்து சரியான பதில் இல்லாததால், சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அர்த்தநாரி.

இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு கணேசன் முன்னிலையில் ‘செக்’ மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து சீனிவாசனுக்கு பிடிஆணை பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட்டு.