நல்லிணக்கம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது – மகிந்த

நல்லிணக்கம் என்ற வார்த்தை தற்போது பாரதூரமான வகையில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

காலி யட்டகல ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெரும்பான்மை இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, சிறுபான்மை இனத்தவர்களை அதிகமாக உபசரிப்பதால், நல்லிணக்கம் உருவாகாது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முடிவுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் நல்லிணக்கம் ஏற்பட்டது. பிரபாகரன் எதிர்பார்த்ததை அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயம்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

6 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிக்கு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

51 உறுப்பினர்களை கொண்ட கூட்டு எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற நேரத்தை பெற்றுக்கொள்வதிலும் சிரமம் உள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

16 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அடுத்த பெரும்பான்மை ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், மூன்றாவது பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.

கூட்டு எதிர்க்கட்சியினர் என்ற பெயரில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்துள்ள போதிலும் அவர்கள் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத ரீதியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.