பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை தகவல்!

ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மென்பொருள் பிழை காரணமாக ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் பதிவு செய்த பழைய போஸ்ட்கள் மீண்டும் உங்களது டைம்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் உட்பட பல்வேறு ஃபேஸ்புக் பயனர்கள் இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டது.

ஃபேஸ்புக் பயனர்களின் டிஜிட்டல் நினைவுகளை ‘On This Day’ மற்றும் ‘Year In Review’ போன்ற அம்சங்கள் மூலம் டைம்லைனில் தெரியப்படுத்தி வருகிறது. இவற்றை பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால் மட்டுமே அவற்றை மீண்டும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய பிழை உங்களின் அனுமதியின்றி உங்களது பழைய போஸ்ட்களை மீண்டும் பதிவிட்டு வருவதாக பெரும்பாலான ஃபேஸ்புக் பயனர்கள் தங்களின் ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்த ஃபேஸ்புக் பயனர் ஒருவர், கிட்டத்தட்ட 30 பழைய போஸ்ட்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாகவும், இதையறிந்ததும் உடனடியாக தனது ஃபேஸ்புக் அக்கவுண்டினை செயல் இழக்கச் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஃபேஸ்புக் பயனர் ஐஓஎஸ் இயங்குதளத்தில் ஃபேஸ்புக் செயலியை அப்டேட் செய்த பின் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனை ஃபேஸ்புக் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் தான் ஏற்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

புதிய ஃபேஸ்புக் பிழை குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.