சபரிமலை ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார்.

நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது.

இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.