இலங்கையின் சித்திரவதை தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை வெளியீடு

நாடுகளில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு தகவல்கள் அடங்கிய அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு 15 பக்கங்களைக் கொண்ட இலங்கை தொடர்பிலான அத்தியாயங்கள், கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 7ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் அமைப்பு உட்பட பல தரப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, நமீபியா, துர்க்மேனிஸ்தான், ஆர்மினியா, ஈக்வடார் மற்றும் பின்லாந்து உட்பட 8 நாடுகள் தொடர்பிலான தகவல் இந்த காலாண்டிற்கான அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சித்திரவதையை நீக்குவதற்கான ஐக்கிய நாடுகள் கொள்கையில் இணைந்துள்ள உறுப்பு நாடுகள் மேற்கொள்ளும் சித்திரவதை மற்றும் அவ்வாறான கொடூரமான செயல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிப்பது ஆகியவைகள் தொடர்பில் அந்த குழுவில் கண்காணிக்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பில் தங்கள் கண்காணிப்பை சமர்ப்பித்த ஐக்கிய நாடுகள் குழு, கைது செய்வதில் இருந்து நபர்கள் முகம் கொடுக்கும் கொடுமை, சித்திரவதை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவதில் மாத்திரமின்றி தடுப்பு முகாம்களில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை தடுப்புக் காவல் மையங்களுக்கு அனுப்பும் போது நீதிபதிகள் அவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் மையங்களில் காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் வருத்தம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் குழு, அந்த மையங்களில் கண்காணிப்பு கெமராவை பொருத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை கடந்த அரசாங்கத்தின் போது மாத்திரமல்லாமல் தற்போதைய ஆட்சியினுள் கைது செய்யப்படுகின்ற நபர்கள் சித்திரவதைகளுக்குள்ளாகுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சித்திரவதைக்கு உட்படுகின்றவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் அந்த குழு திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.