மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவச் செலவுகள் சுகாதாரத்துறையில் இருந்து செலவிடப்பட்டிருப்பதால், ஆடிட்டிங்கின் போது விமர்சனத்துக்கு ஆளாக நேரிடக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுமார் இரண்டரை மாதங்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிப்பதற்காக லண்டனில் இருந்து பிரபல மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் கடந்த 5 ஆம் திகதி அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சுமார் மாதங்களுக்கும் அப்பல்லோ நிர்வாகத்தின் மூலம் அரசுத் தரப்பில் செலவான தொகையை அறிய, பலரும் பலவிதங்களிலும் முயன்று வருகின்றனர். தகவல் பெறும் உரிமை மூலமும் பலர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் அனைத்தையும், அரசே ஏற்றுக் கொள்ள விதிகளில் வாய்ப்புள்ளது.
அந்த அடிப்படையில்தான், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலருக்கும், அரசுத் தரப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது.
அந்த வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை, மருத்துவத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையை, அரசுத் தரப்பில் செலவழித்துள்ளனர்.
நிதித் துறையிலிருந்து, ஒரு அரசு உத்தரவின் மூலமாக, எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்க வாய்ப்புள்ள போது, சுகாதாரத் துறையில் இருந்து பணத்தை எடுத்து ஏன் செலவிட்டிருக்க வேண்டும் என தெரியவில்லை. நாளையே, இந்த விஷயம் ஆடிட்டிங்கின் போது, விமர்சனத்துக்கு ஆளாகலாம் எனவும் கூறப்படுகிறது.







