மாற்றுக் காணிகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 42 குடும்பங்களின் காணிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட மாற்றுக் காணிகளை தாம் வாங்கப்போவதில்லையென அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மால் கையகப்படுத்தப்பட்ட 59 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகவும் ஏனைய 42 குடும்பங்களுக்குரிய காணிகளை தாம் வழங்கப்போவதில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா சந்தித்துக் கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது கேப்பாப்புலவு மக்கள் அவர்களது சொந்த இடத்திற்குள் அனுமதிக்கப்படாது மாதிரிக் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் தம்மைச் சொந்த இடத்தில் குடியேற்றுமாறு தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் 59 குடும்பங்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியேறுமாறும், ஏனைய 42 குடும்பங்களின் காணிகளை தாம் விடப்போவதில்லையெனவும் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த மக்கள் தமக்கு மாற்றுக் காணிகள் எவையும் வேண்டாமெனவும், தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கும் தமது சொந்த நிலமே வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.