உலக பில்லியர்ட்ஸ் காலிறுதியில் பங்கஜ் அத்வானி தோல்வி: அரையிறுதியில் கோத்தாரி

பெங்களூரில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரும், 10 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான பங்கஜ் அத்வானி காலிறுதியில் சக வீரர் சாரல் கோத்தாரியுடன் மோதினார்.
பரபரப்பான இப்போட்டியில், மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோத்தாரி, 1000-644 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். பங்கஜ் அத்வாகினி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

முன்னாள் ஆசிய சாம்பியனான கோத்தாரி தனது வெற்றிக்கு தந்தை மனோஜ் கோத்தாரி முக்கிய காரணமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

‘என் தந்தையுடன் 7 மாதங்கள் தீவிரமாக பயிற்சி பெற்றேன். அப்போது ஸ்னூக்கரை மறந்துவிட்டு பில்லியர்ட்சில் மட்டும் கவனம் செலுத்தும்படி அறிவுரை வழங்கினார். இது உண்மையிலேயே வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.’ என்றார் கோத்தாரி.

மற்றொரு காலிறுதியில் திவாஜ் ஹரியா, ஆங் கிதேயை 1001-677 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 23 வயதான திவாஜ் ஹரியா இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் கோத்தாரியை எதிர்கொள்கிறார்.

இளம் வீரர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணாவை 646-1002 என்ற புள்ளிக் கணக்கில் ரூபேஷ் ஷா வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் பீட்டர் கில்கிறிஸ்டை (சிங்கப்பூர்) சந்திக்க உள்ளார்.