பாகிஸ்தான் விமானம் ஒன்று 47 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகே.661 என்ற பாகிஸ்தான் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் வடக்கு நகரமான சித்ராலிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இந்நிலையில் அபோத்தாபாத் அருகே மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபோத்தாபாத் மாவட்டத்தில் உள்ள ஹவேலியன் என்ற ஊரில் விமானம் விழுந்து நொறுங்கியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தனியால் கிலானி அறிவித்துள்ளார்.
விமானம் ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்குச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.