சோ மறைவு பத்திரிக்கை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்

துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ. ராமசாமி அவர்களின் மறைவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

முதுபெரும் பத்திரிக்கை ஆசிரியரும், “புலனாய்வு பத்திரிக்கை”யை முதன் முதலில் துவக்கியவருமான “துக்ளக்” வார இதழின் ஆசிரியர் திரு சோ ராமசாமி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லதிற்கு நேரில்சென்று திரு சோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். சில தினங்களுக்கு முன்பு தான்அப்பல்லோ மருத்துமனைக்குச் சென்று அவரது உடல் நலம் விசாரித்து விட்டு வந்தேன். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று நினைத்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

வழக்கறிஞர், ராஜ்ய சபை உறுப்பினர், நாடக ஆசிரியர்,  பத்திரிக்கை ஆசிரியர், அரசியல் விமர்சகர் என்று பல பரினாமங்களில் பன்முகத்தன்மை கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வந்தவர். “துக்ளக்” பத்திரிக்கை மட்டுமின்றி ஆங்கிலத்தில் “பிக்விக்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கையையும் நடத்தியவர். அவர் எழுதி, அரங்கேற்றி, நடித்த மேடை நாடகங்களில் அரசியல் நையாண்டி மிகுந்த “முகமது பின் துக்ளக்” நாடகம் குறிப்பிடத்தக்கது. நெருக்கடி நிலைமையை சந்தித்து “எதிர்நீச்சல்” போட்டு “துக்ளக்” பத்திரிக்கையை நடத்தியவர்! தன் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பண்பைக் கொண்ட அவர் என்னிடம் அன்பு காட்டி பழகியவர்.

பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஆசிரியர் சோ மறைவு பத்திரிக்கை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. சோ அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிக்கை உலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.