இரவு பகலாகத் தொடரும் விகாரை நிர்மாணப் பணி! கொக்கிளாய் மக்கள் விசனம்

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

கொக்கிளாய் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அடாத்தாகக் கையகப்படுத்தி, பெளத்த பிக்குகளின் ஆதரவுடன் சிறிசம்போதி மகா விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2010ஆம் ஆண்டு கொக்கிளாய் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதன்போது திருஞானசம்பந்தர் என்ற தனியாருக்குச் சொந்தமான காணி இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் குறித்த காணி விகாரைக்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டு, காணி உரிமையாளர் காணியில் குடியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தக் காணியில் 2012ஆம் ஆண்டு முதல் சிறிசம்போதி மகா விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விகாரை அமைக்கப்பட்டு வரும் காணியை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளரின் மூத்த மகன் மணிவண்ணதாஸ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

எனினும், திருஞானசம்பந்தரின் பெயரில் காணி உரிமைப் பத்திரம் இருப்பதாகவும், பெயர் மாற்றிய காணி உரிமைப் பத்திரத்தைப் பெற்ற பின்னர் வழக்குத் தொடருமாறும் தெரிவித்த நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு சர்ச்சைக்குரிய நிலையில் காணப்படும் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இந்தக் காணியில் விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விகாரை அமைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு காணி அமைச்சினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதனை உதாசீனம் செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு எதி ராக எந்தவொரு தரப்பினராலும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.

அத்தோடு நடைமுறைகளுக்கு முரணாகச் செயற்படும் விகா ராதிபதிக்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.