மாவீரர் தினத்தின் உண்மை நோக்கம் என்ன? மீண்டும் புலிகளா? குழப்பத்தில் சிங்கள மக்கள்..! அரசு மௌனம் களைய வேண்டும்

மாவீரர் தினத்தின் உண்மைத் தன்மை சிங்கள மக்கள் குழப்பமடைவார்கள் என்பதற்காக வெளிப்படுத்தப்பட வில்லையா? என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வி எழுப்பினார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

சென்ற முறை 32 இடங்களில் மட்டுமே மாவீரர் தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டன. ஆனால் இந்த முறை 56 இடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.

எனினும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் இவை தொடர்பில் செய்திகள் வெளியிடப்படவில்லை ஆனாலும் தமிழ் ஊடகங்கள் இதனையே பிரதான தலைப்பு செய்திகளாகக் கொண்டிருந்தன.

ஏன் சிங்கள ஊடகங்களில் இவை பிரசுரிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை, ஆனாலும் சிங்கள மக்கள் குழப்பம் அடைவார்கள் என்ற காரணத்தினால் இவை மறைக்கப்படுகின்றதா? என்பது சந்தேகமே. எனினும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மிகப் பெரிய புலிகள் தூங்கும் கல்லறைகளே மாவீரர்கள் கல்லறைகள் ஆகும். அவற்றிற்கு அஞ்சலி செலுத்துவது அனுமதிக்க முடியாது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வடக்கில் இடம் பெறுகின்றவற்றை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது மக்களின் உரிமையாகும்.

விடுதலைப்புலிகள் என்பவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும், ஆனாலும் பிரபாகரனின் படங்கள், புலிகளின் நிறங்கள், கொடிகள் போன்றவை அண்மைக்காலமாக அதிகமாக தெரிய ஆரம்பித்தது.

இவற்றின் பின்புலம் மீண்டும் புலிகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. விடுதலைப் புலிகள் இருக்கும் போது தடை செய்யப்பட்ட மாவீரர் தினம் தற்போது அனுஷ்டிக்கப்படுவது பொறுத்தமற்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் , பாதுகாப்பு செயலாளரும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் பிரபாகரன் மக்களை கொன்றவர் அவருடைய பிறந்த தினத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி கொடுக்கப்படக் கூடாது.

எனவே இம்முறை மாவீரர் தினம் ஏன் அனுமதிக்கப்பட்டது, வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து இதற்காக எவ்வளவு பணம் வந்து சேர்ந்தது என்பது தெரிய வேண்டும்.

இவை பற்றிய உண்மை நிலையை பாராளுமன்றத்திற்கும் அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.