மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை” – உ.பி.யில் மோடி ஆவேசம்

மொரதாபாத்: கறுப்பு பண ஒழிப்பில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்னிடம் எதுவுமில்லை, நான் எதற்கும் பயப்படவில்லை. என்னை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் எதுவும் செய்ய முடியாது.
நிறைவேறும் வாக்குறுதிகள்:
உபி., மாநிலம் மொரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசியதாவது: நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வி, வேலை, சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது. நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்தே இவை சாத்தியம். கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

நாட்டின் வளர்ச்சியே சமூக பேய்களை விரட்டும். நாட்டில் வறுமை ஒழிப்பே பா.ஜ.,வின் இலக்கு. கல்வி, வேலை, முன்னேற்றமே எங்களின் நோக்கம். நாட்டின் முன்னேற்றம் என்பது கிராமத்தில் அனைவரும் மின்சாரம் பெற வேண்டும் . கடந்த 70 ஆண்டுகளாக மின்சாரம் கிடைக்காமல் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உ.பி., உள்பட நாடு முழுவதும் ஏழ்மையை விரட்ட நான் விரும்புகிறேன். அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கி இருக்கிறோம். பல கோடி பேருக்கு ரூபே கார்டு வழங்கியுள்ளோம்.

நான் ஒரு பக்கிரி
மக்களுக்காக துவக்கிய ஜன்தன் கணக்கை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். கறுப்பு பண முதலைகள், ஏழைகளின் வங்கி கணக்கை தேடி அலைகின்றனர். ஏழைகளை பணக்கார்கள் தாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அரசின் மீது ஏழை மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகையால் தான் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சிரமத்தை பொருட்படுத்தாமல் இருக்கின்றனர். என்னிடம் எந்த சொத்தும் இல்லை. என்னிடம் எதுவுமில்லை. நான் ஒரு பக்கிரி (ஒன்றுமில்லாதவன் ) . ஆகையால் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊழலுக்கு எதிராக போராடி வருவது குற்றமா? கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஊழலே இந்த நாட்டின் பெரும் நோயாகவுள்ளது. இந்த நாட்டின் மக்களே எனது முதலாளி. இவர்களின் விருப்பப்படியே எனது ஆட்சி இருக்கும். இவ்வாறு மோடி பேசினார்.