வாலிபருக்கு ரூ.3 கோடி வசூல் செய்த பொதுமக்கள்: ஏன் தெரியுமா?

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு பொதுமக்கள் ரூ.3 கோடி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசேர்ன் மாகாணத்தை சேர்ந்த டாரியஸ் என்ற 18 வயது வாலிபருக்கு தான் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பனிச்சறுக்கு விளையாட சென்றபோது ஏற்பட்ட பயங்கர விபத்தில் டாரிஸின் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட உடல் செயலிழந்தது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த டாரிஸால் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடியவில்லை.

வாலிபரின் நிலையை கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு உதவும் வகையில் நிதிதிரட்ட தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் திகதி தொடங்கப்பட்ட இந்த வசூல் தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது 209,550 பிராங்க்(3,06,31,013 இலங்கை ரூபாய்) வரை வசூல் செய்யப்பட்டு வாலிபரிடம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உதவியை டாரிஸின் பெற்றோர் அன்புடன் வரவேற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இத்தொகை மூலம் வாலிபர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

மேலும், சிகிச்சை செலவு தவிர்த்து மீதியுள்ள தொகையில் பொதுமக்கள் Lenzerheide நகரில் வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்ததும் எதிர்வரும் டிசம்பர் 15-ம் திகதி வாலிபர் தனது குடும்பத்துடன் இந்த புதிய வீட்டிற்கு குடியேறுகிறார்.

உடல்நலக் குறைவால் அவதியுற்ற வாலிபருக்கு பொதுமக்கள் முன்வந்து நிதி வசூலித்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.