பல்கலைக்கழக துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்று நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் 159-ஆவது பட்டமளிப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரான வகையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்ததையடுத்து, ஆளுனர் அலுவலகம் தலையிட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த மரபு மீறல் தடுக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில், பட்டமளிப்பு விழாவை திசம்பர் ஒன்றாம் தேதி நடத்த தற்காலிக நிர்வாகக்குழு முடிவு செய்தது. பட்டச் சான்றிதழில் பல்கலைக்கழக துணைவேந்தரின் கையெழுத்து இடம் பெற வேண்டிய பகுதியை காலியாக விடவும், அதற்கு அருகில் தற்காலிக நிர்வாகக் குழுவின் தலைவராக இருக்கும் உயர்கல்வி செயலர் கார்த்திக்கின் கையெழுத்து முத்திரையை பதிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவைக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல், பட்டச்சான்றிதழில் உயர்கல்வி செயலரின் கையெழுத்து இடம் பெறக் கூடாது என்றும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து எதிர்ப்பு வலுத்ததால் தான் பட்டமளிப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியமும், மாண்பும் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும், ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளுக்கும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 11 மாதங்களாக காலியாகக் கிடக்கிறது.

சென்னை பல்கலையை விட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிலைமை மோசமாக உள்ளது.

அங்கு 09.04.2015 தேதி முதல் 20 மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக கிடக்கிறது. இதனால் இரு ஆண்டுகளாக அங்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல், 2 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம் என போற்றப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதம் தான் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். ஆனால், அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெற்று 6 மாதங்களாகியும் அப்பதவிக்கு வேறு எவரும் நியமிக்கப்படவில்லை. அதனால் அப்பல்கலைக்கழகத்திலும் இம்மாதம் பட்டமளிப்பு விழா நடத்த வாய்ப்பில்லை. இதனால் அங்கு பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டம் பெற வேண்டிய 4000 பேரும், கல்லூரிகள் மூலம் பட்டம் பெற வேண்டிய 1.50 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஆகியவற்றுக்கு திசம்பர் மாதத்திற்குள் புதிய துணைவேந்தர்களை நியமித்து, 3 பல்கலைக்கழகங்களிலும் வரும் புத்தாண்டிலாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.