வடக்கில் முகாம்களுக்கு வெளியே புத்தர் சிலைகளை அமைக்க வேண்டாம் என பணிப்பு!

வடக்கில் இராணுவ முகாமக்ளுக்கு வெளியே எந்தவொரு பௌத்த சிலைகளையும் அமைக்க வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கின் முப்படை பிரதானிகளுக்கு இவ்வாறு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக எனக்குத் தெரியாது. எனினும் அந்த அமைப்பின் செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றனவா என்பது குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காது துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போருக்கான அபராதத்தை அதிகரிக்கப்படும்.

12 ஆண்டுகளுக்கு குறைவாக சேவையில் ஈடுபட்டு ஊனமுற்ற படைவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தேசிய வனவிலங்கு பூங்காக்களில் இராணுவ பயிற்சி போன்ற நடவடிக்கைகளினால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என தாம் கருதுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.