ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினியின் கணவர் சுவிஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டாரா?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினியின் கணவரான முருகன் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்காக தான் இந்தியாவிற்கு வந்ததாக நளினி தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள நளினி ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா-நளினி சந்திப்பும்’ என்ற புத்தகத்தை எழுதி கடந்த 24-ம் திகதி வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் தனது கணவரான முருகன் எதற்காக சென்னைக்கு வந்தார் என்ற தகவலை நளினி ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்வதற்காக தான் எனது கணவர்(முருகன்) சென்னைக்கு வந்தார். இதனை இரண்டு கடிதங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கின்றன.

ஒரு கடிதத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள எனது கணவரின் உறவினரான அருள் வசந்தா என்பவரும், மற்றொரு கடிதத்தை கனடா நாட்டில் உள்ள எனது கணவரின் உறவினரான ஜெயம் என்பவரும் எழுதியுள்ளனர்.

அருள் வசந்தா எழுதிய கடிதத்தில் ‘சுவிட்சர்லாந்து நாட்டிற்கு எனது கணவரை விரைவில் வரவழைக்க உள்ளதாக’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், எனது கணவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்காக தான் சென்னைக்கு வந்தார். ஆனால், விசாரணை அதிகாரிகள் இக்கடிதங்களை அரசு ஆதாரங்களாக சேர்க்கவில்லை.

ஒருவேளை இக்கடிதங்களை அவர்கள் ஆதாரங்களாக சேர்த்திருந்தால், எனது கணவர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சென்னைக்கு வரவில்லை என்பது நிரூபனம் ஆகியிருக்கும்.

அதேசமயம், வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் பேசும் திறமை இருக்க வேண்டும் என்ற உண்மையும் எனது கணவருக்கு நன்றாக தெரியும்.

எனவே, சென்னைக்கு வந்ததும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பாடசாலையில் அவர் சேர்ந்தார். பின்னர், ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலை நேரங்களில் அவர் தவறாமல் வகுப்புகளுக்கு சென்று வந்தார்.

ஆனால், இந்த உண்மையை விசாரணை அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆங்கில வகுப்பில் முருகன் சேர்ந்தது உண்மை தான். ஆனால் அவர் ஒரு வகுப்பிற்கு கூட செல்லவில்லை என்றும் அந்த நேரத்தில் அவர் ராஜீவ் காந்தியை எப்படி கொல்வது என திட்டமிட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தவறான தகவல்களை சேர்த்துள்ளதாக’ அப்புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார்.