பௌத்த சாசனத்தை பாதுகாப்பேன்;சிறிசேன

பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பதற்கு அரசியலமைப்பில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மதிப்பளித்து அரசாங்கத்தின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பௌத்தர் என்ற ரீதியில் அனைத்து பொறுப்புக்களுக்காகவும் முன்நிற்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மெணிக்கின்ன, ஹுரிக்கடுவ ஸ்ரீ வித்தியாசார பிரிவெனாவில் இடம்பெற்ற ராமான்ய பிரிவின் மகா நாயக்கர் அதிவணக்கத்துக்குரிய நாபாண பேமசிறி தேரரின் 95ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகாநாயக்க தேரரின் சமய, சமூக சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது பிறப்பும் வாழ்வும் பௌத்த துறவிகளுக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்குமே பெருமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமுள்ள தர்ம சிந்தனையுள்ள மகாநாயக்க தேரராக உலகிலுள்ள பௌத்தர்கள் அனைவரினதும் கௌரவத்துக்குப் பாத்திரமான நாப்பான பேமசிறி தேரரின் முன்மாதிரியான வாழ்க்கையை இளம் துறவிகள் ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென்றும் இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.