நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் உறுப்பினரான ராஜேந்திரன் என்பவர், சென்னை 11-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘லயோலா கல்லூரியில் நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறவுள்ளது. சங்கத்தின் விதிகளின் படி இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. நடிகர் சங்க பொதுச் செயலாளரும், பொருளாளரும் படித்த அந்த கல்லூரியில் இந்த பொதுக்குழு கூடுவதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு 11-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி டேனியல் ஹரிதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பொதுக்குழு கூட்டம் சங்க விதிகளை முறையாக கடைபிடித்து தான் நடத்தப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆயிரத்து 700 உறுப்பினர்கள் அமரும் வகையில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம், ரெயில், சாலை போக்குவரத்து என அனைத்து வசதிகளும் இருக்கும் பொதுவான இடத்தில் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த வழக்கு விளம்பர நோக்கில் தொடரப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.