பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாய விடலாமா?

நாட்டில் இப்போது பயங்கரவாதம் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியிருக்கின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் உறுதியாக அறிவித்திருக்கின்றது.

இத்தகைய நிலையில்தான் வடமாகாணத்தின் பல இடங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயற்பாடுகளும் இல்லாவிட்டால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆட்களைக் கைது செய்யப்படுவதன் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது விசுவரூபமெடுத்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்களின் செயற்பாடுகள் பரந்த அளவில் இடம்பெற்று வந்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றனர்.

வாள் வெட்டு குழுக்களைச் சேர்ந்த பலர் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் வாள் வெட்டுக் குழுவினரின் அடாவடித்தனமும், வாள்வெட்டுச் சம்பவங்களும் முடிவுக்கு வந்தபாடில்லை.

ஆனால், யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டுச் சம்பவங்களில் ‘ஆவா குழு’ பிரபல்யமாகியிருக்கின்றது.

வாள்களினால் ஆட்களை வெட்டிக்காயப்படுத்தியும், வாள்களைக் காட்டி அச்சுறுத்தியும் நடத்தப்பட்ட கொள்ளைகள் உட்பட்ட பல்வேறு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

யாழ் குடாநாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்தி, சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தி, வாள்வெட்டு குழுக்களுக்கு எதிராக, பொலிசார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், வாள்வெட்டுச் சம்பவங்கள் எதிர்பார்த்த அளவில் குறைவடையவில்லை.

இதனால் அவர்களின் செயற்பாடுகள் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை சீர் குலைத்திருந்தது. மக்கள் பொலிசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்தார்கள். இந்த அளவுக்கு வாள்வெட்டு குழுவினர் ஆவா குழு என்ற பெயரில் துணிகரமாகச் செயற்படுவதற்கு இராணுவம் பின்பலமாக இருந்து செயற்படுவதாகப் பரவலாக சந்தேகம் எழுந்திருந்தது.

இந்த நிலையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆவா குழுவில் இருந்தார் என்ற தகவல் வெளியாகியதையடுத்து, இராணுவமே, ஆவா குழுவைச் செயற்படுத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது.

அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோட்டாபய ராஜபகச்வே ஆவா குழுவை உருவாக்கியிருந்தார் என தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல், அந்தக் குழுவைச் செயற்படுத்தி வந்த பிரிகேடியர் யார் என்பதும் தனக்குத் தெரியும் என்றும் அவர் உறுதிபடக் கூறியிருந்தார்.

அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் அவர் வெளியிட்ட இந்தக் கூற்று, ஆவா குழுவுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது என்று பலராலும் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்திருந்தது.

ஆனாலும் பாதுகாப்புத் துறை சார்ந்த இரண்டு அமைச்சர்கள் இதனை மறுதலித்திருக்கின்றனர்.

ஆவா குழுவில் இடம்பெற்றிருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தைச் சேர்ந்தவர், இராணுவத்தில் பணியாற்றி, பல மாதங்களுக்கு முன்னர் தப்பியோடி தலைமறைவாகியவர் என்றும், இவருடைய செயற்பாட்டுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றும் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் சாகல இரத்நாயக்கவும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆவா குழுவின் உண்மையான நிலை என்ன?

அத்துடன், ஆவா குழு என்பது கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களே தவிர, அவர்களுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் ஆவா குழுவினர் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதையும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தகைய பின்னணியில்தான் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் பலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வருகின்றார்கள்.

ஆவா குழு தொடர்பாக சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் பல விபரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இணுவில் அம்மன் கோவில் திருவிழாவின்போது, இரண்டு இளைஞர் குழுக்கிடையில் ஏற்பட்ட ஒரு மோதலைத் தொடர்ந்து குமரேஸ் இரத்தினம் விநோதன் என்பவரின் தலைமையில் ஆவா குழு உருவாக்கப்பட்டது.

விநோதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வருகின்றார். ஆயினும் அந்தக் குழுவுக்கு 8 தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்திருக்கின்றார்கள்.

ஆவா குழுவில் 62 பேர் இணைந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கின்றது. இவர்களில் 38 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆறு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிகுதி 32 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரேசில் நாட்டில் இருந்து இந்தியா வழியாகக் கொண்டு வரப்பட்ட முதலாவது வாள் ஒன்றை மாதிரியாகக் கொண்டு உள்ளுரில் வாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தி கொள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வர்த்தகர்களிடம் கப்பம் வசூலித்தல்,  போன்ற குற்றச் செயல்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் சாகல ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் விபரித்துள்ளார்.

இத்தகையதொரு பின்னணியில்தான் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த ஆவா குழுவின் தலைவராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான சன்னா என்பவரே தலைவர் என பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் சன்னாவுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அவருடைய குடும்பத்தினர் மறுத்துரைத்திருக்கின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆவா குழுவினருக்கு நிதியுதவி செய்து வருவதாகவும், அரசாங்கத்திற்கு இந்தக் குழுவினர் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் பயங்கரவாதச் செயல்களுடன் ஆவா குழுவினருக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்திருக்கும் நிலையில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் யாழ் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவானது மற்றுமொரு பரிமாணத்தை நோக்கியிருக்கின்றதோ என்ற அச்ச நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தக் குழப்ப நிலைமை ஒரு புறமிருக்க, ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுவும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதுவும் சட்ட முரண்பாட்டு நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. அத்துடன் சட்டச்சிக்கல்கள் மிகுந்த கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாமா?

நாட்டில் பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயற்பாடும் இல்லாத நிலையில் ஒரு நபரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கையாகத் தெரியவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தார் என்று ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் அந்தச் சட்டத்தின் கீழ் என்ன குற்றம் புரிந்தார் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது சாதாரண சட்டமல்ல. அது விசேடமாகக் கொண்டு வரப்பட்டு விதிவிலக்கான நிலைமைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும்.

பொலிஸார் மற்றும் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல், நாட்டின் தலைவராகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மகாhண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள்  போன்றவர்கள் மீதான தாக்குதல்கள், அத்தகைய தாக்குதலுக்கான சதி முயற்சிகள் போன்றச் செயற்பாடுகள்  பயங்கரவாதச் செயற்பாடுகளாக, பயங்கரவாதக் குற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன.

அத்துடன் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கத்தக்க தேசத் துரோகச் செயற்பாடுகளும் பயங்கரவாதச் செயல்களாகின்றன.

எனவே இது போன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும், அவ்வாறானவர்களைக் கைது செய்து, தண்டிப்பதற்குமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாகியது.

ஆயுத மோதல்கள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த ஓர் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

சிவிலியன் ஒருவரை மற்றுமொரு சிவிலியன் கொலை செய்தால், வாளினால் வெட்டினால், அல்லது வாளைக் காட்டி அச்சுறுத்தி ஒரு சிவிலியனுடைய வீட்டில் கொள்ளையடித்தால் அல்லது கப்பம் வசூலித்தல் பொன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சாதாரண சட்டங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

குற்றச் செயல்களில் மிக மோசமான நடவடிக்கையாக சிவிலியன் ஒருவரை இன்னுமொருவர் கொலை செய்தால்கூட, அந்தக் கொலைக் குற்றத்திற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

இந்த நிலையில் சாதாரண குற்றச் செயல்களுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி சட்ட ரீதியான விவகாரமாக உருவெடுத்திருக்கின்றது.

நாட்டில் இப்போது யுத்தமோதல்கள் இல்லை. யுத்தச் சூழ்நிலையும் கிடையாது. இந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். யாழ் குடாநாட்டில் சட்டச் சீர்குலைவே ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சாதாரண குற்றவியல் நடவடி கோவையின் கீழ் கட்டுப்படுத்தப்படக்கூடிய குற்றச் செயல்களே அங்கு அதிகரித்திருக்கின்றன.

சாதாரண குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது என்பதை சட்ட ரீதியாக நியாயப்படுத்துவது இலகுவான காரியமல்ல.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களில் குறிப்பாக சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் காணப்பட்ட புலனாய்வு பொலிஸார் இரண்டு பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தை வேண்டுமானால் பயங்கரவாதச் செயற்பாடாக சித்தரிப்பதற்கு முற்படலாம்.

இருப்பினும் சம்பவ நேரத்தில் வாள்வெட்டுக்கு உள்ளாகியவர்கள் பொலிஸாரின் சீருடையில் இல்லாத காரணத்தினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதக் குற்றத்தைச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தோடு குற்றம் புரிந்தார்களா என்பது சட்ட ரீதியான விவாதத்திற்கு உள்ளாக நேரிடும்.

யாழ் குடாநாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்செய்வதற்காக பொலிஸார் முன்னெடுத்திருந்த நடவடிக்கையொன்றின்போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக படுகொலை செய்யப்பட்டனர். அந்தச் சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சியையடுத்து, அந்தச் சம்பவம் விசுவரூபமெடுத்தது.

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து கடும் கண்டனங்கள் எழுந்திருந்த சூழலிலேயே ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு ஆட்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெறும் வரையில் ஆவா குழுவினர் என்று வர்ணிக்கப்படுகின்ற வாள்வெட்டு குழுவினருக்கு எதிராக சாதாரண சட்ட விதிகளின் கீழேயே பொலிஸார் கைதுகளை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தி வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்தகைய தண்டனைகளை எதிர்த்து செய்யப்பட்ட மேன்முறையீடுகளும் மேல் நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே வரலாறாக உள்ளது.

இவ்வாறு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலைமையில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணங்களையடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்ற நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இது இப்போது பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

வடக்கில் கைது செய்யப்பட்டவர்களை தெற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தலாமா?

ஒருவரைக் கைது செய்தால், கைது செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமை பிரிவில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டமே, நாட்டின் உயர்ந்த, முதன்மையான சட்டமாகும்.

அதேநேரம் கைது செய்யப்படுபவர்கள் விரைவாக நீதிமன்றங்களில் ஆஜர் செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அரசியல் உரிமைகள் மாநாட்டு சட்டங்கள் கூறுகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை தொடர்பான சட்டப் பிரிவை மீறினால், ஒரு மாத காலத்தில், அதனால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவருடைய உறவுகள் அல்லது அவர் சார்பான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

அத்துடன், இத்தகைய அடிப்படை மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதகாலத்தில் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்பட்ட சர்வதேச சிவில் அரசியல் உரிமை மாநாட்டுச் சட்டம் கூறுகின்றது.

யுத்தமோதல்கள் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம், விசேட பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் இந்தச் சட்;டங்கள் அப்போதைய சூழலில் தேவையை கருத்திற் கொண்டு ஆக்கப்பட்டிருந்தன.

சாதாரண சட்டத்தின் படி கைது செய்யப்படுபவர்கள் 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும்.

இந்த சட்டப்பிரிவுகளில் இன்னுமொரு பிரிவின்படி கைது செய்யப்பட்டவர் இல்லாவிட்டாலும்கூட, கைது செய்யப்பட்டவர் தொடர்பான குற்ற அறிக்கைகள் 24 மணிநேரத்தில் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஒரு குற்றச் செயல் இடம்பெற்றிருந்தால், அதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படாதபோதிலும், அந்தக் குற்றச் செயல் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். குற்ற நடவடி கோவையில் இந்த விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சாதாரண சட்ட நடவடிக்கைகள் யுத்த காலத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும் ஆயுதமேந்திப் போராடியவர்களைக் கட்டுப்படுத்துவதற்குமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட விசேட சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஒரு பயங்கரவாதச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுகின்ற ஒருவரை, பிணையின்றி 18 மாதங்கள் தடுத்து வைப்பதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் வழிவகுத்திருக்கின்றது. இந்தத் தடுப்புக்காவல் உத்தரவை பாதுகாப்பு அமைச்சர் வழங்க வேண்டும் என்பதும் அந்தச் சட்டத்தின் விதியாகும்.

அதுவும் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இந்த தடுப்புக் காவல் உத்தரவு பாதுகாப்பு அமைச்சரினால் புதுப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட வேண்டும். அந்த வகையிலேயே கைது செய்யப்பட்ட ஒருவரை 18 மாதங்களுக்குத் தடுத்து வைத்திருக்கலாம் என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவு கூறுகின்றது.

அதேவேளை, கைது செய்யப்படுகின்ற ஒருவரை பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம், 3 மாதத்திற்கு ஒரு தடவை தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்து, அவரை ஒரு வருடத்திற்குத் தடுத்து வைத்திருக்க முடியும் என்று, இப்போது செயலற்றுள்ள அவசரகாலச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இந்தச் சட்ட விதிகள் மிகத் தீவிரமாக நடைமுறiயில் கைக்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி, அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல இடங்களிலும், அதேபோன்று, கிழக்கு மாகாணப் பிரதேசங்களிலும் ஆட்கள் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர்கள், கொழும்பு மற்றும் அனுராதபுரம் போன்ற வெளி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலையாக்;கப்பட்டார்கள். அன்றைய யுத்தச் சூழல் அதற்கு ஏற்புடையதாக இருந்தது.

இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புச்சட்டத்தை மீறியதாக இருந்த போதிலும், நாட்டின் பாதுகப்பு  மிக முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில், இதனை எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போது நிலைமை அவ்வாறில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது.

அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான செயற்பாடுகள் இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றன.  இந்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று அங்கு முன்னிலைப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயற்பாடுகளல்ல.

இது சட்ட விவகாரமாக உருவெடுத்துள்ளதுடன், இதற்கு தகுதி வாய்ந்தவர்களினால் தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஜனநாயக உரிமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்ட தேவை தலையெடுத்திருக்கின்றது.