யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும்

யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விடயத்தில் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையான நிலை நீடித்து வருகின்றது.

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18ம் 19ம் திகதிகளில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கு கூட முன்னைய அரசாங்க காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று விடுதலைப்புலிகள் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் நவம்பர் மாதத்தில் 21ம் திகதி முதல் 28ம் திகதிவரை மாவீரர் வாரமாக அனுஷ்டித்திருந்தனர்.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.தற்போது மாவீரர் வாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பிலும் சர்ச்சை எழுந்திருக்கின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை மே மாதத்திலோ அல்லது நவம்பர் மாதத்திலோ நினைவுகூர முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிலைமை காணப்பட்டாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது என்ற விடயத்தில் இந்த அரசாங்கமும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்துக்களையும், படைத்துறைப்பேச்சாளர்கள் மாற்றுக்கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதில் தவறில்லை. அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பெயரை வைத்து நினைவுகூரலாம். ஆனால் புலிகளை நினைவுகூர முடியாது என்று அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை மக்கள் நினைவுகூருவதில் தவறில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை எவரும் நினைவுகூர முடியாது. இதற்கு அனுமதி வழங்கவும் முடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசாங்கத் தரப்பின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடானது வேறுவிதமாக அமைந்திருக்கின்றது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் தினம் அனுஷ்டிப்பதில் தவறெதுவும் இல்லை.

ஏனெனில் உயிர் நீத்தவர்களுக்கு அன்றைய தினத்தில் அவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறானவர்களின் ஆத்ம சாந்திக்கு வழிபாடு நடத்தவேண்டியது அவசியமாகும்.

எனினும் அவ்வாறான அனுஷ்டிப்புக்களை சிங்கள மக்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதனை நிறுத்தி இறந்தவர்களுக்கான அனுதாப நிகழ்வாக நோக்கவேண்டும் என்று எடுத்துக்கூறியிருக்கின்றார்.

வடக்கில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கையும் தென்னிலங்கையிலுள்ள சிலர் புலிகளின் நடவடிக்கை என்ற கண்ணோட்டத்திலேயே நோக்குகின்றனர். அதனால்தான் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் இடை வெளி நிலவுகிறது.

அக்கண்ணோட்டம் மாற்றப்படவேண்டும். வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளில் தென்னிலங்கை மக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மாவீரர் வாரத்தினை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமானது அனுமதி வழங்க வேண்டும். தென்பகுதியில் 80 களில் கொல்லப்பட்ட ஜே.வி.பி.யினரை நினைவுகூர்ந்து கார்த்திகை வீரர்கள் தினம் அனுஷ்டிக்க முடியுமானால் ஏன் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து மாவீரர் தினம் அனுஷ்டிக்க முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.யுத்தத்தின்போது உயிரிழந்த எவரையும் அவர்களது உறவுகள் நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களது கோரிக்கையாக இருக்கின்றது.

ஆனால், அரசாங்கமும் உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம் என்றும் ஆனால் விடுதலைப்புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் மாவீரர் வாரத்தின் போது வடக்கின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டன.

அவை பகிரங்கமாக நடத்தப்படாவிடினும் இரகசியமான முறையில் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இத்தகைய செயற்பாடுகளில் கடந்த காலத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நேற்று முன்தினம் இரவு பொலிஸார் அத்துமீறி உட்புகுந்து மாவீரர் தினத்தை யாராவது அனுஷ்டித்தால் சுடுவோம் என அச்சுறுத்தியுள்ளதாகவும் முறையிடப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் சக மாணவனின் பிறந்தநாளைக் கொண்டாட முற்பட்டவேளை அத்துமீறி அங்கு பொலிஸார் நுழைந்து இந்த நிகழ்வை நிறுத்தியுள்ளனர்.

சக மாணவனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஏனைய மாணவர்களையும் அழைத்துக்கொண்டு இவர்கள் சென்றபோதே இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

மாணவர் விடுதிக்குள் திடீரென துப்பாக்கிகளுடன் புகுந்த நான்கு பொலிஸார் தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இங்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிந்தே தாம் வந்ததாகவும், அவ்வாறு அனுஷ்டிக்கப்பட்டால் சுடுவோம் என எச்சரித்து சென்றதாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டி சந்திப்பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததையடுத்து பெரும் பதற்றம் நிலவியிருந்தது.

இந்தப் பதற்றம் இன்னமும் தணிவதற்கு முன்னர் பொலிஸார் பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை மீண்டும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கையாகவே மாறியிருக்கிறது.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்தவர்ளை நினைவுகூர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு நினைவுகூர முற்பட்டால் படைத்தரப்பால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று நினைவுகூரக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் சென்று அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்த வருடம் மே மாதம் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு அங்கு நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இத்தகைய அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கான அனுமதியினை நல்லாட்சி அரசாங்கம் வழங்கியே இருந்தது.

தற்போது கூட நவம்பர் மாதம் மாவீரர் வாரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரலாமா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதில் எந்தத் தவறுமில்லை என்று அமைச்சரவையின் பேச்சளார் ராஜித சேனாரட்ன அறிவித்திருக்கிறார்.

இதேபோல், கடும் போக்குடன் இல்லாத நிலைப்பாட்டினையே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எடுத்து வருகிறது. எனவே, தற்போதுள்ள நல்லிணக்க சூழலை குழப்பும் வகையில் தமிழர் தரப்பு தலைமைகளும் செயற்படுவது அவ்வளவு நல்ல முயற்சியாக அமையாது.

ஏனெனில் கடந்த ஆட்சிக்காலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது உயிரிழந்தவர்களை பகிரங்கமாக நினைவுகூரத்தக்க சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இத்தகைய சூழலை குழப்பியடிப்பதானது முரண்பாடுகளை தீவிரப்படுத்த உதவுமே தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எந்த வகையிலும், உதவப் போவதில்லை.

எனவே, இந்த விடயத்தில் சகல தரப்பினரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இதனைவிடுத்து அரசியல் நோக்கங்களுக்காக மக்களையோ, மாணவர்களையோ தூண்டிவிடுவதனால் மீண்டும் பாதிக்கப்படப்போவது அந்த மக்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.