‘ஜனாதிபதி மாமா! எனது அப்பாவை விடுவியுங்கள்… பார்க்க ஆசையாக உள்ளது’ ஒரு மகளின் கதறல்

தனது தந்தை 8 வருடங்களாக சிறையில் இருப்பதாகவும் அவரை விடுவிக்குமாறும் ரஜிதா என்ற ஒரு சிறுமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த சிறுமி தமது கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தச் சிறுமி மட்டுமல்ல குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் சிறுமி தனது தந்தையை விடுவிக்குமாறும், 8 வருடங்களாக செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதாகவும், உண்ணாவிரதம் இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

“எனது தந்தையைக் காண ஆசையாக இருக்கின்றது. ஜனாதிபதி மாமா! தயவு செய்து எனது தந்தையை விடுவியுங்கள்” என மிகவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, சிவலிங்கம் என்பவரும் தனது மகனை விடுவிக்குமாறு கூறினார்.

8 வருடங்களாக தனது மகன் தண்டனை அனுபவிப்பதாகவும், நிபந்தனை அற்ற விடுதலை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நல்லாட்சி ஆரம்பித்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் பொது மன்னிப்பு வழங்கவில்லை, இனியாவது தாருங்கள் என்ற கோரிக்கையினை முன்வைத்தார் இந்த தந்தை.

மேலும், யாழைச் சேர்ந்த தேவராணி என்ற தாயும் தனது மகன் சிவபாலனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

தனது மகன் 10 வருடமாக சிறையிலே இருப்பதாகவும், தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

“குற்றத்தை ஒப்புக்கொண்டால் விடுதலை செய்வதாக அறிவிக்கின்றனர், ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்காவிட்டால் மேலும் 10 வருடங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமே” என கவலை தெரிவித்தனர்.

நல்லாட்சியில் நல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம், ஆனால் எதும் நடக்கவில்லையே எனவும் தமது சேகத்தை வெளியிட்டார் இந்த தாய்.

மேலும் இதன்போது கருத்து தெரிவித்த சந்தியா எக்னெலிகொட கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகளை எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை அடங்கிய மகஜரினை கையளிக்க வந்துள்ளோம்.

ஜே.வி.பி காலத்திலும், தற்போதைய ஜனாதிபதியும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய சம்பவங்களை நாம் அறிந்திருக்கின்றோம். அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் சந்தியா எக்னெலிகொட.