அபூதாலிபின் மரணமும் நபிகளாரின் துக்கமும்

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) மற்றும் நபிகளாரின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

அபூதாலிபின் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில் நபி முஹம்மது (ஸல்) அவரைச் சந்திக்கச் சென்றார்கள். அங்கே அவரருகே அபூஜஹ்லையும் அப்துல்லாஹ் பின் அபூ உமய்யாவையும் கண்டார்கள். அப்போது நபிகளார், “என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள். இந்த ஏகத்துவ உறுதிமொழிக்காக நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்” என்று சொன்னார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இறுதியில் அபூதாலிப் “நான் என் தந்தை அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்” என்று சொல்லி உறுதிமொழி எடுக்க மறத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்குத் தடை விதிக்கப்படும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்பேன்” என்று கூறினார்கள்.

“இறைவனுக்கு இணைவைத்து வணங்குபர்கள் தம் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” என்ற இறை வசனமும் “நபியே! நீங்கள் நேசிப்பவர்களையெல்லாம் நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உங்களால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்லத் தகுதி பெற்றவர்களை அவனே நன்கறிவான்!” என்ற இறை வசனமும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது.

குறைஷித் தலைவர்கள் மற்றும் இணைவைப்பவர்களின் தாக்குதலிலிருந்து நபிகளாரை பாதுகாத்து உதவியது அபூதாலிப். அப்படியிருக்க, அபூதாலிபுக்கு பிரதி உபகாரமாக நபிகளால் என்ன செய்ய முடிந்ததென்று அப்பாஸ் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம்  முஹம்மது (ஸல்) அவர்கள் “ஆமாம், என் பெரிய தந்தை அபூதாலிப் எனக்குப் பல வகையில் உதவியுள்ளார். அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தித்ததால் இப்போது அவர் கணுக்கால்வரை தீண்டும் சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார், இல்லையென்றால் அவர் நரகின் அடித்தளத்திற்கே சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் ஆழ்ந்த துயரத்தில் இருந்தார்கள்.

திருக்குர்ஆன் 9:113, 28:56, ஸஹீஹ் முஸ்லிம் 39:1, 357:1

-ஜெஸிலா பானு.