இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் வக்கீல் சசிகுமார் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் கவுண்டமணி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நலமாக உள்ளார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் (பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்) சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அடையாளம் தெரியாத நபர்கள் இதுபோன்ற வதந்தியை பரப்புகின்றனர்.

இதனால் கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும், உற்றார், உறவினர்களும், நண்பர்களும் மன வருத்தப்படும் சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியாகும்போது கவுண்டமணிக்கு செல்போனில் பேசி, அவரது ரசிகர்களும் நலம் விசாரிக்கிறார்கள்.

இன்று (நேற்று) காலையில் கவுண்டமணி என்னிடம் செல்போனில் பேசினார். இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி கவுண்டமணி என்னிடம் கேட்டுக்கொண்டார். கவுண்டமணி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.

போலீஸ் கமிஷனரையும் நேரடியாக சந்தித்து பேச இருக்கிறேன். சைபர் கிரைம் போலீசார் நான் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரிக்க உள்ளனர். வதந்தி பரப்புபவர்கள் யார்? என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.