ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வால் இலங்கையர்களுக்கும் பாதிப்பா?

ஜப்பானில் இன்று(22) காலை ஏற்பட்ட நில நடுக்கத்தால் அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பேராசிரியர் கங்காநாத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

7.3 ரிச்டர் அளவில் புகுஷிமா நகரை அண்மித்த பசிபிக் பெருங் கடலில் 11.3 கிலோ மீட்டர் அழத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த நில அதிர்வை அமெரிக்கா 6.9 ரிச்டர் என தனது புவியியல் சார் ஆய்வு மையத்தினூடாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்வால் டாய்ச்சி அணு நிலையத்தில் உள்ள மூன்று அணு உலை உருகியதால் 18 ஆயிரம் பேர் வரை இறந்தும் காணாமல் போயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.