விருதுகள் மீது ஆசை இல்லை: தமன்னா

தமன்னா ‘பாகுபலி’ படத்தில் அதிரடி வேடத்தில் வந்தது போல் வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். கதை தேர்விலும் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘தேவி’ பேய் படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. விஷால் ஜோடியாக நடித்த ‘கத்தி சண்டை’ படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. சிம்புவுடன் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தனது படங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வப்படுகிறேன். எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை. விருது படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் கிடையாது. வசூல் இல்லாமல் தோல்வி அடையும் படத்தில் நடித்து விருது பெறுவதில் எந்த பயனும் இல்லை. படங்கள் நன்றாக ஓடி வெற்றி பெற வேண்டும். அதுவே விருது பெற்றதற்கு சமமானதாக இருக்கும்.

நான் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். நன்றாக ஓடி எல்லோருக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நடிக்கிறேன். சமீபத்தில் நான் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. பாகுபலி இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்து இருக்கிறேன்.

இந்தியில் எனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்று சொல்வது தவறு. நான் நடித்த பாகுபலி படம் இந்தியில் வசூல் சாதனை நிகழ்த்தியது. குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். நான் நடிக்கும் பல படங்கள் இரண்டு மூன்று மொழிகளில் தயாராகிறது. அதனால்தான் ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி ஏற்படுகிறது. தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.