காதலியை கத்தியால் தாக்கி கண்ணை தோண்டி எடுத்த காதலன்

சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலியை சரமாரியாக கத்தியால் தாக்கி அவருடைய ஒரு கண்ணை தோண்டி வெளியே எடுத்த நபருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Saane நகரில் 59 மற்றும் 48 வயதான காதலர்கள் வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் காதலி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் 21ம் திகதி தனது முன்னாள் காதலி பணி செய்யும் அலுவலகத்திற்கு சென்ற நபர் ‘தன்னுடன் திரும்பி வந்துவிடுமாறு’ கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் காதலன் வற்புறுத்தி கேட்டும் அவருடன் செல்ல முடியாது என அப்பெண் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் மார்பகம் மீது 4 முறை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர், முகத்திலும் தாக்கியுள்ளார்.

அப்போது, ‘பார்….நாம் இருவரும் இங்கேயே இறந்து விடுவோம்’ என கத்திய அந்நபர் தனது மார்பிலும் கத்தியால் குத்திக்கொண்டார்.

சில வினாடிகளுக்கு பிறகு ஆத்திரம் அடங்காத அந்நபர் மீண்டும் காதலியின் முகத்தில் தாக்கியுள்ளார்.

இந்த முறை பெண்ணின் கண்ணுக்குள் கத்தி பாய்ந்துள்ளது. இதனால் அவரது ஒருக்கண் துண்டாக கீழே விழுந்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சில தினங்களுக்கு பிறகு நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நபரால் தாக்கப்பட்ட பெண் தற்போது செயற்கை கண் ஒன்றை பொருத்தியுள்ளார்.

நபர் மீதான வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, முன்னாள் காதலியை இரக்கமின்றி தாக்கி கொல்ல முயன்ற குற்றத்திற்காக நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிற்கு 20,000 பிராங்க் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.