தமிழர்கள் மீதான யுத்தம் பௌத்தத்தால் தொடர்கிறது: சபையில் சாடினார் சிறிதரன் எம்.பி.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது நேரடியாக யுத்தம் நடத்தாமல் இராணுவத்தினரால் ஒருபுறமும் புத்தர் சிலைகளை நிறுவுவதன் மூலம் மஹா சங்கத்தினரால் மறுபுறமும் யுத்தம் தொடுக்கப்பட்டு வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய சிறிதரன், தற்போதைய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமையானது புதிய அரசியல் யாப்பிலும் வழங்கப்படுமாயின் நாடு பேராபத்தை எதிர்கொள்ளுமென எச்சரித்தார்.
இதனை மாற்றியமைக்கும் துணிச்சல் அரசுக்கு வராத வரை, தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதையும் தமிழர்கள் அச்சத்துடன் வாழ்வதையும் தவிர்க்க முடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் புதிதாக ஆலயங்களை அமைப்பதையே தவிர்த்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதானது மக்களின் இதயத்தை கீறிப் பார்க்கும் செயலாக அமைந்துள்ளதென சிறிதரன் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அரசாங்கம் இதனைக் கவனத்திற்கொண்டு புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.