ரணிலும் மகிந்தவும் ஒரே நிகழ்வில்!

அரசியலில் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

உலக அரசியலில் மாத்திரமல்ல இலங்கை அரசியலுக்கும் இது பொருந்தும். ஆனால், பொதுமக்கள் கட்சிகளாகவும் சங்கங்களாவும் பிரிந்து தமக்குள் மோதிக்கொள்வதை காண முடிகிறது.

மக்களை பிரித்தாளும் அரசியல்வாதிகள் தமக்குள் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். இதற்கு உதாரணமாக கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிறந்த வர்த்தக நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிஸ்னஸ் டுடே டெப் 30 விருது வழங்கும் விழாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அருகில் அமர்ந்தும் மகிழ்ச்சியாக சிரித்து பேசிக்கொண்டனர்.

கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கங்காராம விகாராதிபதி கலகொட ஞானசார தேரர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

பிரதமருடன் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தனியார் துறையில் சிறந்த நிறுவனமாக ஜோன் கீல்ஸ் நிறுவனம் முதலிடத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தை கொமர்ஷல் வங்கியும் மூன்றாவது இடத்தை ஹட்டன் நஷனல் வங்கியும் பெற்றுள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் பொதுமக்கள் தமக்கு கட்சி, சங்கம் என பிரிந்து மோதிக் கொண்டாலும் அரசியல்வாதிகள் மேடைகளில் மாத்திரமே ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்கின்றனர்.

தனிப்பட்ட ரீதியில் இவர்கள் நண்பர்களாக இருப்பதுடன் உதவிகளையும் செய்து கொள்கின்றனர் என்பது இரகசியமான விடயம் அல்ல என அரசியலில் குறிப்பிடத்தக்கது.