பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை: பார்த்திபன்

பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார். மேலும், அவர் பேசும்போது, இந்த படத்தில் சாந்தனுவை கதாநாயகனாக ஆக்குவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. நான் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சாந்தனுவை அழைத்திருந்தேன்.

அப்போது, அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்க வந்த ராகவா லாரன்ஸ், சாந்தனுவின் நடனம் மற்றும் அவருடைய ஸ்டைல் எல்லாம் பார்த்து அவரை வைத்து ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். மேலும், என்னுடைய குரு பாக்கியராஜ் சாருக்காக எதையாவது ஒன்றை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை சாந்தனுவுக்கு செய்தால், அவர் மூலமாக பாக்கியராஜ் சாரை சென்றடையும் என்பதாலும் தான் இந்த படத்திற்கு சாந்தனுவை இந்த படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்தேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, பெரிய நடிர்கர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை. அவர்களின் படங்கள் எந்த நாட்களில் வெளியானாலும் ரசிகர்கள் சென்று தியேட்டரில் பார்ப்பார்கள். அஜித் படம் செவ்வாய் கிழமையில் ரிலீஸ் ஆனாலும் நான் தியேட்டரில் சென்று பார்ப்பேன் என்று பொடி வைத்து பேசினார்.

மேலும், ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்கும்படியான ஒரு படமாகத்தான் எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் என்னுடைய படத்திற்கு வரவேற்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.